• 28 Apr, 2025

அதானி காற்றாலை விவகாரம்: அமைச்சர் சந்திரசேகரன் அளித்த விளக்கம்

அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டத்தை மாற்றி சீனாவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ வழங்கும் எண்ணம் அரசாங்கத்திறகு இல்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(14.02.2025) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், “சீனாவுக்கு அல்லது வேறு நாடுகளுக்கோ வழங்குவதற்காக அதானியின் திட்டத்தை நிறுத்துவதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை.

அதானி திட்டம்

அதானியின் திட்டத்தை இப்போதைக்கு சரி என ஏற்றால் சில காலங்களில் அந்த முடிவு தவறாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

குறித்த காற்றாலை திட்டத்தால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இலங்கை மின்சார சபைக்கும் பயன் கிட்டுமா என்பது தொடர்பில் பல விடயங்களை ஆராய வேண்டியிருந்ததே தவிர அவர்களை நிறுத்திக் கொண்டு வேறு யாருக்கும் வழங்கும் நோக்கம் இருக்கவில்லை. நாங்கள் ஏன் அவருக்கு கொடுப்பதா, இவருக்கு கொடுத்தால் நலமா என பேசுவதிலும் பார்க்க எமது நாட்டில் உள்ள முதலீட்டாளர்களையும் புலம்பெயர் நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களையும் அழைத்து திட்டங்களை மேற்கொள்வதற்கு எண்ணி உள்ளோம் அதற்கான அழைப்பினை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

ஆகவே காற்றாலை திட்டத்திலிருந்து அதானி விலகியதில் எவ்வித அரசியல் உள்ள நோக்கமும் கிடையாது” என அவர் தெரிவித்துள்ளார்.